தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு இல்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய் என்றும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 2022ல் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை தொற்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதாகவும், குரங்கம்மை தொற்றால் ஆப்பிரிக்கா நாடுகளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்பிரிக்காவில் அதிகரித்து வரும் குரங்கு அம்மை நோய் பாதிப்பால், அவசர சுகாதார நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதாகவும், தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 21 நாட்களில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்த பயணிகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, நிணநீர் கணுக்கள் வீக்கம் உள்ளவர்களுக்கு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் சோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள பொது சுகாதாரத்துறை
துறைமுகங்கள் வழியாக வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.