ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றதற்காக கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கப் பரிசு பெற்றிருக்கும் இந்திய வீரர்களுக்கு வரி விலக்கு உண்டா? பிற நாடுகளில் எவ்வாறு உள்ளது? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
16 நாட்கள் பாரிசில் கோலாகலமாக சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் இடம் பெற்றிருக்கின்றன.
ஜப்பான் நாட்டில் டோக்கியாவில் நடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கம் உட்பட 7 பதக்கங்களை வென்ற இந்தியா இந்த முறை 6 பதக்கங்களை வென்றிருக்கிறது.
பெண்கள் மற்றும் கலப்பு அணிகள் துப்பாக்கிச் சுடுதலில் மனு பாகர் பெற்ற 2 வெண்கலப் பதக்கங்கள், ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதலில் ஸ்வப்னில் குசாலே பெற்ற 1 வெண்கலப் பதக்கம், ஆண்கள் ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி பெற்ற வெண்கலப் பதக்கம், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா பெற்ற வெள்ளிப் பதக்கம் மற்றும் ஆண்களுக்கான மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் பெற்ற வெண்கலப் பதக்கம் என மொத்தம் 6 மதிப்புமிக்க பதக்கங்களுடன் இந்திய வீரர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள்.
தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம், எந்த நிதி வெகுமதிகளும் வழங்குவது இல்லை. என்றாலும், பெரும்பாலான நாடுகள், ஒலிம்பிக் பதக்கம் வென்ற தங்கள் நாட்டு வீரர்களைப் பெருமை படுத்தும் விதமாக வெகுமதி அளித்து வருகிறது.
ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு அந்தந்த நாடுகளால் வழங்கப்படும் வெகுமதியின் அளவு நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, தங்கம் வென்றவருக்கு 37,500 அமெரிக்க டாலரும்,வெள்ளி வென்றவருக்கு 22,500 அமெரிக்க டாலரும் , வெண்கலம் வென்றவருக்கு 15000 அமெரிக்க டாலரும் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டு சட்டம் படி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு, தங்கம் வென்றால் 80000 யூரோவும்,வெள்ளி வென்றால் 40000 யூரோவும் ,வெண்கலம் வென்றால், 20,000 யூரோவும் வழங்கப் படுகிறது.
அமெரிக்காவிலும், பிரான்சிலும் இந்த பரிசு தொகைக்கான வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, தங்கம் வென்றவருக்கு 75 லட்சம் ரூபாயும் , வெள்ளி வென்றவருக்கு 50 லட்சம் ரூபாயும், வெண்கலம் வென்றவருக்கு 30 லட்சம் ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப் படுகிறது. மேலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் மற்றும் அரசு வேலைகளும் வழங்கப் படுகின்றன.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற மனு பாகருக்கு 30 லட்சம் ரூபாயும், சரபோஜ் சிங்குக்கு 22.5 லட்சம் ரூபாயும் வெகுமதிகளாக, மத்திய அரசு வழங்கி கௌரவித்திருக்கிறது.
இந்திய வருமான வரிச்சட்டத்தின் 10 (17ஏ) பிரிவின்படி மத்திய நேரடி வரிகள் வாரியமானது (CBDT) , பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் ரொக்கப் பரிசுகளுக்கு பொதுநலன் கருதி வரிவிலக்கு உண்டு என கூறி இருக்கிறது .
2014 ஆம் ஆண்டு இதுதொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவின்படி ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போன்ற போட்டித்தொடர்களில் பதக்கம் வென்றவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைகளுக்கும் வரிவிலக்கு உண்டு என அறிவித்திருக்கிறது.
தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபரிடமிருந்து வாங்கப்படும் பரிசு அல்லது வெகுமதி 50000 ரூபாய்க்கு மேலானால் , அந்த தொகைக்கு வருமானவரி கட்டவேண்டும். இந்த வரியை, பரிசு தருபவரோ அல்லது பரிசு பெறும் வீரரோ கட்டவேண்டும் என்று இந்திய வருமானவரி சட்டம் தெரிவிக்கிறது. இதிலும் கார் உட்பட சில குறிப்பிட்ட பரிசு பொருட்களுக்கு இந்தியாவில் வரி விலக்கு அளிக்கப் படுகிறது.
இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் தனிநபரில் பிரிவில் முதல் தங்க பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரரான அபினவ் பிந்த்ராவுக்கு வழங்கப்பட்ட சுமார் 96 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.