அதிமுக அவசர செயற்குழு கூட்டம் எந்த நோக்கத்திற்காக கூட்டப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு ஏற்பட்ட இந்த வன்முறை, பெண் இனத்திற்கே விடுத்த மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது. இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவர்களும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கு மாநில அரசு உரிய முயற்சி எடுக்க வேண்டும்.
அவசர செயற்குழு குறித்த கேள்விக்கு:
அவசர செயற்குழு எதற்காக கூட்டப்பட்டது அதன் நோக்கம் என்ன என்பதை அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே எங்களுக்கும் அவர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் உள்ளது. இதனால் எந்த வித கருத்தும் சொல்ல முடியாது.
திமுகவினரை கடுமையாக விமர்சித்து விட்டு தேநீர் விருந்தில் அவர்களுடன் சிரித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்த கேள்விக்கு:
இரட்டை நிலைப்பாடு எடுத்த ஜெயக்குமாரிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. அவர் நடத்துகின்ற நாடகத்திற்கு நான் விளக்கம் கொடுக்க தேவையில்லை எனத் தெரிவித்தார்.
இபிஎஸ் ராஜாஜிக்கு நிகரானவர் என பொன்னையன் கூறியது குறித்த கேள்விக்கு, பலமாக சிரித்த ஓபிஎஸ், நீங்கள் கேள்வி கேட்கும்போதே சிரிக்கிறீர்கள் அதிலிருந்தே அந்த கருத்து எப்படிபட்டதாக இருக்கும் என புரிந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.