அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று கருத்து கணிப்புக்கள் கூறுகின்றன. கமலா ஹாரிஸ் அதிபராவது இந்தியாவுக்கு சாதகமா ? இந்திய-அமெரிக்க உறவில் என்ன தாக்கம் ஏற்படும் ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகினார்.
இதையடுத்து ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், அதுவும் கறுப்பின பெண் ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்
இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் அதிபர் தேர்தல் தொடர்பான கணிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுக்க ஜனநாயக கட்சிக்கு ஆதரவான அலை உருவாகி வருவதாகவும், இதனால் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ஜனநாயக கட்சியின் ஆதரவு 3 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக அதிபர் தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்யும் ஸ்விக் மாகாணங்களில் கமலா ஹாரிஸ்ஸுக்கு அதிகமான ஆதரவு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
கல்வி, நிதி மற்றும் தொழில் ரீதியாக, இந்திய-அமெரிக்கர்கள் சராசரி அமெரிக்கரை விட மிக உயர்ந்த நிலையில் அமெரிக்காவில் வாழ்கின்றனர். நாசா, மயோ கிளினிக் போன்ற மருத்துவ ஆராய்ச்சி நிலையங்கள், சிலிக்கான் பள்ளத்தாக்கில் மென்பொருள் உற்பத்தி தொடங்கி சூப்பர் கண்டக்டர் வடிவமைப்பு வரை அமெரிக்காவில் வாழும் இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயன்பெற்று வருகிறது.
இந்திய-அமெரிக்கர்கள் தங்களுக்குத் தகுதியான முக்கியத்துவத்தை அமெரிக்காவில் பெரும் முக்கியமான காலக் கட்டத்தில் , கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக வெற்றி பெறும் நிலையில், இந்திய-அமெரிக்க உறவில் சிக்கலை ஏற்படுத்தி விடுவார் என்று அரசியல் நோக்கர்கள் சொல்லுகிறார்கள்.
அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதும் இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்திய மக்கள் நல்வாழ்த்துக்கள் சொல்லி கமலா ஹாரிஸின் வெற்றியைக் கொண்டாடினார்கள்.
2021 ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, துணை அதிபர் கமலா ஹாரிஸை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் துணை அதிபரானதில் இருந்து ஒருமுறை கூட கமலா ஹாரிஸ் இந்தியாவுக்கு வரவில்லை.
2023ம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்தியாவில் வேர்கள் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் உள்ளனர். அதில் சிலர் இந்த சபையில் பெருமையுடன் அமர்ந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் தம் பின்னால் இருக்கிறார் என்று தமக்கு பின்னால் அமர்ந்திருந்த, கமலா ஹாரிஸ்ஸை குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது சட்டப் பிரிவை நீக்கிய போது, காஷ்மீர் மக்கள் தனியாக இல்லை என்பதை நினைவூட்ட விரும்புவதாகவும், காஷ்மீர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், கமலா ஹாரிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
துணை அதிபராக இருக்கும் போதே , இந்திய-அமெரிக்க உறவில் நல்ல மாற்றத்தை கொண்டு வராத கமலா ஹாரி, அதிபர் ஆனதும் கொண்டுவரவா போகிறார்? என்று இந்திய அமெரிக்கர்களே கேள்வி எழுப்புகிறார்கள்.
துணை அதிபராக மினசோட்டா ஆளுநரும், இடது சாரியுமான டிம் வால்ஸை தேர்ந்தெடுப்பதன் மூலம், கமலா ஹாரிஸ் ஒரு முக்கிய செய்தியை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
இந்திய அமெரிக்கர்களின் நலன்களையும், இந்து எதிர்ப்பு கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களுக்கும், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்துபவர்களுக்கும், காலிஸ்தான் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும் ஆதரவான நிலையை கமலா ஹாரிஸ் எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் இந்திய உளவுத்துறை காலிஸ்தான் தீவிரவாதியை கொன்றதாக நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டிய போது அமெரிக்க ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டதையும் தெரிவித்திருந்தார். அப்போது ஜோ பைடன் அரசு, விசாரணைக்கு ஒத்துழைப்பதன் மூலம் மறைமுக நெருக்கடியை இந்தியா மீது மேற்கொண்டது.
அப்போது துணை அதிபரான கமலா ஹாரிஸ், என்ன நிலைப்பாடு எடுத்தார் என்றும் அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
மேலும் இந்த ஆண்டு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில் இந்தியாவில் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, சீன அரசின் அடக்குமுறை நடைமுறைகளைப் பின்பற்றுகிறது என்றும் விமர்சனம் செய்திருந்தது
ஆரம்பத்தில் நிக்சன் கிஸ்ஸிங்கர் காலத்தில் இருந்தது போலவே 1980-களின் பிற்பகுதியிலிருந்து 1990களின் முற்பகுதி வரை, அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் இறுக்கமாகவும் வெகு தொலைவிலும் இருந்தன.
2001ம் ஆண்டு புஷ்ஷுக்கு பிறகு ஒவ்வொரு நிர்வாகமும், இராஜதந்திர ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அமெரிக்க-இந்தியா உறவுகளை நல்ல முறையில் வளர்க்கவே முயன்றன.
உண்மையில், இந்தியாவின் நட்பு நாடாக இருக்க வேண்டும் என்பதையே ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் தங்கள் ஒரே வெளியுறவுக் கொள்கையாக கொண்டிருந்தனர் .
சர்வதேச அளவில் இந்தியா அனைத்து துறைகளிலும் முதன்மை பெறும் போது , இந்தியாவை எதிர்த்து விட்டு எந்த நாடாளும் வளர முடியாது. உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்தும் மரியாதையும் அதிகரித்து வருகிறது.
எனவே அமெரிக்க அதிபராகும் வாய்ப்பு வந்தால் , கமலா ஹாரிஸ்ஸும் இந்தியாவுடன் நல்லுறவை பேணினால் மட்டுமே அமெரிக்காவை வளர்ச்சி பாதையில் கொண்ட செல்ல முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.