அவரவர் தகுதிக்கு ஏற்ப அவரவர் தங்கள் மனைவி மீது வைத்துள்ள தீராக்காதலின் அடையாளமாக பரிசளிப்பது இயல்பு. மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் சக்கர்பெர்க் தனது மனைவி பிரிஸ்கில்லா சானுக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா ? அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆன மார்க் ஜுக்கர் தான் ஒரு கலாரசிகர் என்பதை அடிக்கடி வெளிப்படுத்தி வருபவர்.
2003ம் ஆண்டில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே மார்க் ஜுக்கர்பெர்க்கும் பிரிசில்லா சானும் காதலித்து வந்தனர். 2012ம் ஆண்டு முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், மார்க் ஜுக்கர்பெர்க் தன் வீட்டு பின்புறமுள்ள தோட்டத்தில் 7 அடி உயரத்தில், தனது மனைவி பிரிசில்லா சானின் சிலையை வைத்திருக்கிறார். இந்த சிலையுடன் தன் மனைவி இருக்கும் புகைப்படத்தையும் மார்க் ஜுக்கர்பெர்க் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ரோமானிய பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வருவதாகவும் தலைப்பிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.
‘அன்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு சிறந்தது?” என்று கருத்து தெரிவித்து, கணவர் தந்த பரிசுக்கு தனது மகிழ்ச்சியை பிரிசில்லா சான் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மார்க் சக்கர்பெர்க் தனது மனைவி மீதான காதலுக்கு அடையாளமாக மனைவியின் சிலையை வீட்டுத் தோட்டத்தில் வைத்திருப்பதற்கு, நெட்டிசன்களும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
14.5 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட ஜுக்கர்பெர்க், மனைவிக்கு ஆழ்ந்த அன்பையும் நன்றியையும் காட்ட விரும்பி , இப்படி செய்திருக்கிறார் என்றும், சரியான பெண், ஒரு ஆணை உண்மையான ஆணாக மாற்றுகிறாள்! என்றும் பலர் பல விதமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகின் புகழ்பெற்ற கலைஞர் டேனியல் அர்ஷாம் வடிவமைத்துள்ள இந்த பிரிசில்லா சானின் சிலை முழுவதும் பச்சை மரகத ரத்ன கல்லால் உருவாக்கப் பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு பேஸ்புக்கில் மார்க் சக்கர்பெர்க், பிரிசில்லா சான் உடனான தனது முதல் சந்திப்பு குறித்து எழுதி இருந்தார்.
அதில் தாம் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவேன் என்று நினைத்து, தமது நண்பர்கள் ஒரு பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்திருந்தனர் என்றும், அந்த விழாவில் தான் பிரிசில்லா சானை முதன் முதலில் சந்தித்தாகவும், கண்டதும் காதல் வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.