மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியார் பேருந்துநிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி அரசுப்பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த இந்த பேருந்து மீது தாழ்வாக இருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது.
சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகளை வெளியேற்றினார். இந்த சம்பவம் தொடர்பாக மின்வாரியத்திற்கு புகாரளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னர் தாமதமாக வந்த மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்து சேதமடைந்த மின்கம்பியை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.