கள்ளச்சாராய உயிரிழப்பில் நிவாரணம் அறிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேங்மேன் தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு செவி சாய்ப்பதில்லை ஏன்? என தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள சென்னை மின்வாரிய தலைமையகத்தின் முன்பாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கேங்மேன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கேங்மேன் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளராக மாற்ற வேண்டும், கேங் மேன் களப் பணியாளர்கள் அனைவரையும் அவரவர் சொந்த ஊர்களில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், கேங் மேன் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால், வரும் 22ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.