முத்தலாக் நடைமுறையால் இஸ்லாமிய பெண்களின் நிலை பரிதாபமான நிலையை எட்டியதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறை இஸ்லாமியர்களிடையே நடைமுறையில் இருந்து வந்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முத்தலாக் நடைமுறையை ரத்து செய்து உத்தரவிட்டது. முத்தலாக் நடைமுறை செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், இந்த விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என வலியுறுத்தி, சமஸ்தா கேரள ஜாமியாதுல் உலமா என்ற அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், முத்தலாக் நடைமுறையால் இஸ்லாமிய பெண்கள் பரிதாபகரமான நிலையை அடைந்ததாகவும், முத்தலாக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்த போதிலும், இந்த நடைமுறை மூலம் செய்யப்படும் விவாகரத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை என்றும் பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும் முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்படும் பெண்கள் காவல் துறையை அணுகும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிமுறை இல்லாததால், இந்த விவகாரத்தில் கடுமையான சட்டத்திட்டங்கள் தேவைப்படுவதாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.