திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிந்த நிலையில் அதன் மேல் நின்று பக்தர்கள் செல்ஃபி எடுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆவணி மாத பௌர்ணமி தினத்தையொட்டி சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு பக்தர்கள் படையெடுத்தனர்.
இதற்கிடையே கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயில் கடற்கரையில் குடும்பம் குடும்பமாக தங்கியிருந்து மணலில் விளக்குகளை வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்ததால் ஆச்சரியமடைந்த பக்தர்கள் பாறைகள் மீது ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.