திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த நபரின் உடலை சுமார் 5 மணி நேரமாக மீட்காமல் காலம்தாழ்த்திய காவல்துறையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்காயம் அடுத்த முல்லைப்பகுதியை சேர்ந்த பிரபு, தனது இரு நண்பர்களுடன் குறும்பதெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்தில் மோதிய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்தில் பிரபு உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இந்நிலையில், வாணியம்பாடி தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதி எனக்கூறி ஆலங்காயம் காவல்துறையினர் சுமார் 5 மணி நேரமாக உடலை மீட்காமல் இருந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பிரபுவின் உறவினர்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்க முயன்றதுடன் போலீசாரின் மெத்தனப்போக்கை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.