சபர்மதி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதற்கு நாசவேலையே காரணம் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே 1,700 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சபர்மதி பயணிகள் விரைவு ரயில் சனிக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கிச் சென்ற சபர்மதி விரைவு ரயில் கான்பூரை தாண்டியபோது திடீரென தடம் புரண்டதில் 22 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச்சென்றன.
இதில் சுமார் 450 மீட்டர் தூரத்துக்கு ரயில் பெட்டிகள் தரையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டன. நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்நிலையில், சபர்மதி விரைவு ரயில் விபத்து தொடர்பாக 6 பேர் கொண்ட குழு மேற்கொண்ட விசாரணையில், தண்டவாளத்தின் குறுக்கே 93 சென்டிமீட்டர் நீளம்கொண்ட துருபிடித்த இருப்பு பாதையின் பாகம் கிடந்ததே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
ரயிலை கவிழ்க்கும் நோக்கில் விஷமிகள் சிலர் அதை இருப்புப் பாதையில் போட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.