புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை கணவன் வீட்டின் முன்பே தகனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பொன்னன்விடுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் தனது கணவரான பழனிராஜை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். பழனிராஜ் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அதே ஊரைச் சேர்ந்த பிரபா என்ற வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நாகர்கோவில் அருகே வாழ்ந்து வருவதாகவும், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் புவனேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு அவரது தந்தையும் மரணம் அடைந்தார். இந்நிலையில் புவனேஸ்வரி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பழனிராஜை கைது செய்ய கோரி அவரது வீட்டின் முன்பு புவனேஸ்வரியின் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார் புவனேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட புவனேஸ்வரியின் சடலத்தை அவரது கணவர் வீட்டின் முன்பே உறவினர்கள் தகனம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.