ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையில் தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார்.
இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி வெளியானது. அந்த கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றிருந்தன.மேலும் இரண்டு யானைகள் மற்றும் வாகைப்பூவும் இடம்பெற்றன.
இந்நிலையில் தவெக கொடி தொடர்பாக விஜய் மீது சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.