மேற்குவங்க பந்த் எதிரொலியால் கொல்கத்தாவில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்தப்படி சென்றனர்.
மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி 12 மணி நேர பந்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. கொல்கத்தா பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பாஜக நிர்வாகி அக்னிமித்ரா பால், பகுதி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஹெல்மெட் அணிந்து செல்லும்படி போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்குவது சிரமமாக இருந்தாலும், அச்சம் காரணமாகவே ஹெல்மெட்டை அணிந்து செல்வதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கொல்கத்தாவின் பாடா சவுக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
மேற்குவங்கம் பர்கானாஸ் பகுதியில் சென்ற பாஜக நிர்வாகி பிரியங்கு பாண்டேவின் கார் மீது மர்மநபர்கள் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்தனர். பாஜக நிர்வாகி தலையில் குண்டுபாய்ந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.