வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்
தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யவுள்ள பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அவர் வாழ்த்து தெரிவித்தார். விழாவில் அவர் பேசியதாவது :
இன்று அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான நாள். தமிழ்நாட்டில் வந்த பாரத் ரயில் அதிகம். அதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் இதயத்தில் தமிழ் மக்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ்மொழி உயர்ந்த இடத்தில் வகிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பல்வேறு நாடுகளுக்கு கொண்டு சென்று பறைசாற்றுகிறார். மலேசியா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
2047ம் ஆண்டு நாட்டை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு. மத்திய அரசின் நிதி மூலம் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
இன்றைய நிகழ்ச்சி தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் இலக்கிற்கு முக்கிய காரணியாக அமையும் என ஆளுநர் தெரிவித்தார்.