பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்திய தடகள வீரர்கள் 20 பதக்கங்களை வென்று டோக்கியோ சாதனையை முறியடித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 இறுதிப் போட்டியில் சரத்குமார் வெள்ளியும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 20 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 19 பதக்கங்களை கைப்பற்றிய நிலையில், பாரிஸ் போட்டியில் 20 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். போட்டி நிறைவு பெற இன்னும் ஓரிரு நாட்கள் உள்ளதால் இந்திய வீரர்களின் பதக்க பட்டியல் மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது.