சென்னை பெருங்குடியில் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பொறியியல் மையம் அமைக்க ஈட்டன் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் 8 நிறுவனங்களுடன் ஆயிரத்து 300 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைத்திட சிகாகோவில் உள்ள அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து மின்மேலாண்மை மற்றும் ஹைட்ரோலிக்ஸ் துறையில் முன்னணி வகிக்கும் ஈட்டன் நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னையில் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் (Global Utility Engineering Centre) மையத்தை நிறுவுவதற்காக ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.