சென்னை அசோக்நகரில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து சக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மகா விஷ்ணு என்பவர் சொற்பொழிவாற்றியபோது பாவ – புண்ணியம், மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
மேலும், முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதாக அவர் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஆதரவு தெரிவித்து சக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பணியிடமாற்ற உத்தரவை திரும்பப்பெறக்கோரி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸை சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.