சிறியவர் முதல் பெரியவர் வரை கொண்டாடும் பண்டிகை என்றால் விநாயகர் சதுர்த்தி தான். வேண்டியதை எல்லாம் அளிக்கும் விநாயகர் பற்றியும், அவருக்கான மகாசதுர்த்தி விழா பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. கஜமுகாசுரன் என்னும் அசுரன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து, இறைவனிடம் ஒரு வினோதமான வரத்தைப் பெற்றுவிட்டான்.
அதாவது, தன்னைக் கொல்பவன் மனிதனாகவும் இருக்கக் கூடாது; மிருகமாகவும் இருக்கக் கூடாது; மனிதரோ தேவரோ உருவாக்கின ஆயுதத்தால் தன்னைக் கொல்லக் கூடாது என்று வரம் பெற்றிருந்த கஜமுகாசுரன் தேவர்களையும் ரிஷிகளையும் படாதபாடு படுத்தி வந்தான்.
கஜமுகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் அனைவரும் ,சிவபெருமானிடம் சென்று தங்கள் துயரங்களை போக்கவல்ல விக்கினராஜன் வேண்டும் என்று வேண்டுதல் வைத்தனர். ஈசனும் தேவர்களின் வேண்டுதலுக்குத் செவி சாய்த்தார்.
திருக்கைலாயமலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபம் இருந்தது. அந்த ஏழு கோடி மந்திரங்களுக்கு நடுவில் சமஷ்டிப் பிரணவம், வியஷ்டிப் பிரணவம் என்னும் இரண்டு பிரணவங்கள் ஒளிவீசிக் கொண்டிருந்தன.
அந்த இரண்டு பிரணவங்களையும் பார்வதியும், பரமேஸ்வரனும் கருணையுடன் நோக்க, அவை இரண்டும் இணைந்தது. அதில் இருந்து ஓங்காரச் சொரூபமான பிள்ளையார் யானை முகத்துடன் தோன்றி அருளினார்.
அம்மையப்பரை வலம்வந்து வழி பட்டதால் பிள்ளையார் என போற்றப்படுகிறார். சிவகணங்களுக்கு எல்லாம் தலைவர் என்பதால் கணபதி என்று அழைக்கப்படுகிறார். தமக்கு மேல் ஒரு நாயகன் இல்லை என்பதால் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகளுடன் விநாயகப் பெருமான், ஓங்கார மந்திர சொரூபமாக விளங்குகிறார்.
விநாயகப் பெருமானின் கும்பம் ஏந்திய கரம் படைத்தல் தொழிலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகப் பெருமான் ஐம்பெருந் தொழில்களைத் தம் ஐந்து கரங்களால் புரிந்து அனைத்து ஆன்மாக்களுக்கும் அருள்புரிகின்றார்.
பிற தெய்வ வடிவங்கள் சிற்ப இலக்கணத்துக்கு ஏற்பவே அமையவேண்டும் என்பது சாத்திரம். ஆனால் பிள்ளையாரை மஞ்சள்,சந்தனம், களி மண், மஞ்சள், வெல்லம், சாணம், எருக்கம் வேர், என எதில் பிடித்து வைத்து வழிபட்டாலும் நன்மைகள் புரிவார் என்று விநாயக புராணம் கூறுகின்றது. அருகம்புல் சாற்றி விநாயகப் பெருமானை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும் என்கிறது சாஸ்திரம்.
முதன் முதலில் பார்வதிதேவி தான் விநாயகர் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்து அனைவருக்கும் வழிகாட்டியதாக புராணங்கள் கூறுகின்றன.
குறுமுனி அகத்தியரின் கமண்டலத்தில் கவிழ்த்து காவிரியைத் தந்தவர். முருகனுக்குத் திருமணம் நடத்தி வைத்தவர். வேத வியாசர் சொல்ல சொல்ல மகா பாரதத்தை எழுதியவர்.தேவாரத் திருமுறைகளை மீட்டுக் கொடுத்தவர்.இத்தகைய பெருமைகள் உடைய பிள்ளையார் எளிமையாக வழிபடும் பக்தர்களுக்கு எல்லா சிறப்புக்களையும் அள்ளித் தருகிறார்.
கணபதி தாளை தலையில் வைத்தால் திக்கெல்லாம் ஜெயக் கோடி நாட்டலாம் என்று மகாகவி பாரதி சொன்னது போல் கணபதியை வணங்கி வெற்றி பெறுவோம்