கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் நீதி வழங்க கோரி, பெண்கள் அதிகாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பணியில் இருந்த பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி வழங்க கோரி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சிலிகுரியில் அதிகாலையில் பெண்கள் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், முன்னாள் டேபிள் டென்னிஸ் வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்றவருமான மந்து கோஷ் கலந்து கொண்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதமாகியும் குற்றவாளி கைது செய்யப்படாததால், அனைத்து தரப்பும் மக்களும் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்து கொண்டதாகத் தெரிவித்தார்.
இதேபோல் கொல்கத்தா ஷயாம்பஜார் பகுதியில் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.