விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி தினத்தை ஒட்டி தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலைகள் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முல்லைப் பெரியாற்றங்கரையில் கரைக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. . அப்போது ஏராளமான இளைஞர்கள் மேள தாளங்களுடன் உற்சாக நடனமாடினர். பின்னர் அங்குள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
கோவில்பட்டியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டது. கோலாட்டத்துடன், மேள தாளம் முழங்க நடைபெற்ற ஊர்வலம் மார்க்கெட் சாலை, ரயில்வே நிலையம், கடலையூர் சாலை வழியாக சென்று வேம்பார் கடலில் கரைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வேன் மற்றும் டிராக்டர்களில் மேளதாளங்கள் முழங்க ஆடல் பாடலுடன் பேருந்து நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து வேடம் அணிந்த நடன கலைஞர்களின் நடனத்துடன் கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டது.