காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊதிய உயர்வு கேட்டு பிரபல தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கிவரும் சாம்சங் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் ஊதிய உயர்வு, 8 மணி நேர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்களாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர் கமலக்கண்ணன் தலைமையில் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்க நிர்வாகம் மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால், தொடர்ந்து 3-வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.