லெபனான் மற்றும் சிரியாவில் ஒரே சமயத்தில் பேஜர்கள் வெடித்ததில் 9 பேர் பலியான நிலையில், சுமார் 2800 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது.
அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 30-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் லெபனானில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் புவாட் ஷூகர் உயிரிழந்தார்.
இதன்பிறகு இருதரப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், செல்போன்களுக்கு பதிலாக பழங்கால பேஜரையே தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் லெபனான் மற்றும் சிரியாவில் நேற்று ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின.
இதில் பேஜர் பயன்படுத்திக் கொண்டிருந்தவர்களின் கைகள் துண்டாகின. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 2 ஆயிரத்து 800 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 200-க்கும் மேற்பட்டோர்
கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.