அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் அரசுத் தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2012ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் இருந்து இருவரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்குகளில் இருந்து இருவரையும் விடுவித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்குகளை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றி, அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்து விசாரணையை விரைந்து நடத்தி தீர்ப்பளிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கக் கோரி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், இரு அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.