திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கும் முன்பாகவே அக்கட்சிகளின் வழித்தோன்றலாக மாறியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் அடுத்து நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காய் நிர்ணயித்து தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், தமது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகமாக மாற்றப்பட்டதிலிருந்தே சுதந்திர போராட்ட தியாகிகளின் பிறந்தநாளன்று அக்கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில், கட்சியின் தலைவர் விஜய் முதன்முறையாக நேரடியாக வந்து பெரியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து சொல்ல மறுப்பு போன்ற விஜய்யின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் திராவிட இயக்கங்களை பின்பற்றும் வகையில் அமைந்திருப்பதாக கூறப்பட நிலையில், பெரியாரின் கொள்கைகளான சமத்துவம், சம உரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என அறிக்கை வெளியிட்டதோடு, பெரியார் திடலுக்கே சென்று அவரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியிருப்பது அந்தக் கூற்றை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
விஜய்-யின் இந்த செயல் பற்றி கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அனைத்து தலைவர்களுக்கும் இது போன்ற மரியாதையை விஜய் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம், மொழி, இனம் குறித்து திராவிட இயக்கங்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் தவெக தலைவர் விஜய்க்கும் உருவாகியுள்ளதாக கூறுகிறார் பத்திரிக்கையாளர் ப்ரியன்.
தமிழகத்தில் ஆளும் திமுக, ஆண்ட அதிமுகவுக்கு மாற்றாக தமிழக வெற்றிக் கழகத்தை
தொடங்கியிருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கருதும் நிலையில், கட்சியின் தலைவரோ அதிமுக, திமுக பின்பற்றும் திராவிட இயக்கப் பார்வையிலேயே ஒவ்வொரு நிகழ்வுகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்திற்கு திராவிட சாயல் கொண்ட இன்னொரு அரசியல் கட்சி வேண்டாம் என கூறியிருக்கிறார் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
தமிழகத்தில் திராவிட சிந்தாந்தத்தின் மூலமாகவே மக்களை எளிதில் சென்றடைய முடியும் என்ற எண்ணத்திலும், திராவிடத்தின் அடிப்படையில் அரசியலை கையிலெடுத்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்ற நோக்கத்திலும் விஜய் திராவிட பாதையை தேர்ந்தெடுத்திருப்பதாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இனிவரும் காலங்களில் திராவிடத்தின் நீட்சியாக விஜய் தொடர்வாரா ? அல்லது திராவிடங்களிலிருந்து வெளிவருவாரா என்பதற்கு விஜய்யின் அடுத்தடுத்த நிகழ்வுகளே பதிலாக அமையும்.