திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்தி 13 மணி நேர சோதனை நிறைவு பெற்றது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றி மற்றும் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்தது என்பதை மத்திய அரசின் பகுப்பாய்வு அறிக்கையும் உறுதி செய்துள்ளது. மேலும் திருமலைக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்ததோடு, நெய்யையும் திருப்பதி தேவஸ்தானம் திருப்பி அனுப்பியுள்ளது.
இதனிடையே, தங்களது பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளலாம் என ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவன தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், நெய் பொருட்களை ஆய்வுக்குட்படுத்திய சான்றுகள் தங்களிடம் உள்ளது எனவும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவின் முருகேசன் தலைமையிலான குழுவினர் 13 மணி நேர சோதனைக்கு பிறகு நிறுவனத்தில் இருந்து பால், நெய், பன்னீர், வெண்ணை, தயிர், மோர், இனிப்பு போன்ற பொருள்களின் மாதிரிகளை ஆய்விற்காக எடுத்து சென்றனர்.