ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 18-ம் தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட தேர்தலில் 61 புள்ளி 38 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து, ஜம்மு பிராந்தியத்தில் 11 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 15 தொகுதிகள் என 26 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
2-ம் கட்டத் தேர்தலில் சுமார் 25 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 3 ஆயிரத்து 502 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா, அப்னி கட்சித் தலைவர் அல்டாஃப் புகாரி உள்ளிட்ட 239 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என்பதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், ராணுவ வீரர்கள், துணை ராணுவத்தினர், காவல் துறையினர் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், தீவிரவாதம் இல்லாத மற்றும் வளர்ந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்க அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசாங்கத்திற்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.