ஆசியாவிலேயே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக இந்தியா உள்ளது என்று மூடிஸ் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது. புவியியல் அமைப்பு ரீதியாக, இந்தியா தொடர்ச்சியான கடுமையான பருவமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்பாக்குள்ளாகிறது.
உலகளவில் 2.7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ள அபாயங்களை எதிர்கொள்கின்றனர், எனினும், தெற்காசியா தான் மிகவும் பாதிக்கப்படுகிறது.
இந்த சூழலில், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் நிலப் பயன்பாடு ஆகியவற்றிலிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில், மூடிஸ் மதிப்பீட்டு நிறுவனத்தின் அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும், பயனுள்ள பேரிடர் மேலாண்மையின் அவசியத்தையும் இந்த அறிக்கை வலியுறுத்தி உள்ளது.
உலகளவில் 2.7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ள அபாயங்களை எதிர்கொள்கின்றனர், என்றாலும் தான் தெற்காசியா மிகவும் பாதிக்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் 2.7 பில்லியனில், மூன்றில் ஒரு பகுதியினர், உள்நாட்டு அல்லது கடலோர வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்கின்றனர். இது, இந்தியாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு ஆகும் .
ஆசியாவிலேயே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடான இந்தியாவில் 622 மில்லியன் மக்கள் அல்லது 44 சதவிகித மக்கள் உள்நாட்டு வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் என்றும், மேலும் 48 மில்லியன் மக்கள் கடலோர வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் என்றும் மூடிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவை தொடர்ந்து மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.
சீனாவின் மக்கள் தொகையில் 32 சதவீத மக்கள் வெள்ளத்தால் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்றும், பாகிஸ்தானில் 61 சதவீத மக்களும், பங்களாதேஷில் 73 சதவீத மக்களும், இந்தோனேசியாவில் 38 சதவீத மக்களும், உள்நாட்டு வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மூடிஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, உள்நாட்டு வெள்ளத்திற்கு மிகக் குறைவான வெளிப்படும் பகுதியாக ஓசியானியா உள்ளது. அதன் மக்கள்தொகையில் 17 சதவீதத்துக்கும் குறைவானமக்களே வெள்ளத்தால் ஆபத்தைச் சந்திப்பதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் வட ஆசியா ஆகியவை மிகக் குறைந்த அளவே கடலோர வெள்ள அபாயத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் மக்கள் தொகையில் 0.27 சதவீத மக்கள் மட்டுமே வெள்ளத்தால் பாதிப்படைகின்றனர் என மூடிஸ் அறிக்கை கூறுகிறது.
1975 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் நில பயன்பாட்டில் புதிய நடைமுறைகள் காரணமாக வெள்ள அபாயங்கள் அதிகரித்து வருகிறது.
உலக அளவில், சுமார் 260 மில்லியன் மக்கள் கடலோர வெள்ள ஆபத்தில் உள்ளதாகவும், அவர்களில் 70 சதவீதக்கும் அதிகமானோர் இந்தியா,சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய ஐந்து நாடுகளில் மட்டுமே குவிந்துள்ளனர்.
பங்களாதேஷில், முழு மக்களும் உள்நாட்டு அல்லது கடலோர வெள்ளத்திற்கு ஆளாகிறார்கள் என்றும், பாகிஸ்தானில் ஐந்தில் மூன்று பேர் உள்நாட்டு வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசித்து வருவதாக கூறியிருக்கும் மூடிஸ் அறிக்கை, வரும் காலங்களில் வெள்ள ஆபத்து வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று சுட்டிக் காட்டி உள்ளது.
உலகப் பொருளாதார மன்றத்தின் இணையதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 2050ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றத்துக்காக, ஆண்டுக்கு 1.7-3.1 டிரில்லியன் டாலர்கள் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.