மதுரையில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இரு அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
கடந்த 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியின் இறுதிச்சுற்றை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் கோவை அணியும், சென்னை அணியும் மோதின.
ஆட்டம் முடிவடைய 40 விநாடிகள் இருந்த நிலையில் இரு அணியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சென்னை அணிக்கு ஆதரவாக நடுவர்கள் செயல்பட்டதாக கோவை அணியைச் சேர்ந்த வீரர்கள் குற்றஞ்சாட்டினர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மற்றும் நடுவர்கள், சென்னை அணி முதலிடம் பிடித்ததாகவும், கோவை அணி வெள்ளி வென்றதாகவும் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கோவை அணியினர் வீடியோ ஆதாரங்களை காண்பித்து நடுவர்களிடம் முறையிட்டனர்.
இதற்கிடையே விளையாட்டு மைதானத்தில் காயமடைந்த மாணவி ஒருவருக்கு முதலுதவி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஆம்புலன்ஸ் மற்றும் ஸ்ட்ரச்சர் வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லை என்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.