கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் ஊழியர்கள், இன்று மீண்டும் பணிக்கு திரும்பினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவன ஊழியர்கள், கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு,
தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறையிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து போராட்டம் தொடர்ந்தது.
இதனையடுத்து, சாம்சங் ஊழியர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்த அமைச்சர்கள் குழு, சாம்சங் ஊழியர்கள், நிர்வாகிகள், சிஐடியு தலைவர்கள் ஆகியோரின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால், சுமார் 39 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சாம்சங் ஊழியர்கள், மீண்டும் பணிக்கு திரும்பினர்.