இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தின் மீது ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் நான்கு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்ட இஸ்ரேல் ராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து தாக்கியது எப்படி ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த அக்டோபரில் தொடங்கிய யுத்தத்தில், ஹமாஸ் தலைவர் இப்ராஹிம் ஹனியே, ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா உட்பட பல உயர்மட்ட தலைவர்களைக் கொன்ற பிறகும், லெபனானிலும், காஸாவிலும், இஸ்ரேல் தொடர்ந்து தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு, வடக்கு இஸ்ரேலில் ஹைஃபாவுக்கு தெற்கே 33 கிலோமீட்டர் தொலைவில் பின்யாமினா நகரத்துக்கு அருகில் உள்ள இஸ்ரேல் இராணுவத் தளத்தை ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானங்கள் தாக்கின.
ஹைஃபாவுக்கும் டெலி அவிவ் வுக்கும் இடையில் உள்ள இந்தப் பகுதியில் அமைந்திருக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் கோலானி படைப் பிரிவைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவினர் மிர்சாத் ரக ட்ரோன்களை ஏவியதாகவும், அவை கடலில் இருந்து இஸ்ரேலிய வான்வெளிக்குள் நுழைந்தன என்று கூறப்படுகிறது.
ஈரான் தயாரித்துள்ள மொஹஜர் -2 போலவே இந்த ஹிஸ்புல்லாவின் மிர்சாத் ரக ட்ரோன்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. மணிக்கு 370 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து , 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை இந்த ட்ரோன்களால் தாக்க முடியும் என்றும், சுமார் 3,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன்கொண்ட இந்த ட்ரோன்களால் 40 கிலோகிராம் வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் முடியும் என்றும், இஸ்ரேலின் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஹிஸ்புல்லாவின் இரண்டு ட்ரோன்களையும், இஸ்ரேலிய ரேடார்கள் கண்காணித்து வந்துள்ளன. ஒரு ட்ரோனை இஸ்ரேல் ராணுவம் தடுத்து விட்டது. இஸ்ரேல் கண்ணில் மண்ணைத் தூவிய, ஹிஸ்புல்லாவின் இரண்டாவது ட்ரோன் தாக்குதலை துல்லியமாக நடத்தி இருக்கிறது.
ராணுவத் தளத்தில் எப்படி ட்ரோன் நுழைந்தது என்பதைப் பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை விட மிகவும் புத்திசாலித்தனமாக எதிரிநாட்டுக்குள் நுழையவும், கண்காணிக்கவும் மற்றும் தாக்குதல் நடத்தவும், ட்ரோன்களால் முடியும்.
கடந்த மே மாதம் ஹிஸ்புல்லாவின் தற்கொலைப்படை ட்ரோன்கள், இஸ்ரேலின் மிக முக்கியமான விமானப்படை கண்காணிப்பு அமைப்பு மீது தற்கொலை தாக்குதல் நடத்தியது. பிறகு, இஸ்ரேலின் வடக்கில் ஹைஃபா மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள், ராமட் டேவிட் விமானப்படைத் தளம் உள்ளிட்ட முக்கிய வசதிகளை படம்பிடிக்கும் கண்காணிப்பு ட்ரோன்களை இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அனுப்பியது.
ஆரம்பத்தில், பாராகிளைடர்கள் போன்ற குறைந்த-தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி ஹிஸ்புல்லா இஸ்ரேலைத் தாக்கி வந்தது. 2000 ஆம் ஆண்டில் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறிய பிறகு, ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ஹிஸ்புல்லா பயன்படுத்தத் தொடங்கியது. 2004 ஆம் ஆண்டில், ஹிஸ்புல்லா தனது முதல் உளவுத்துறை மிர்சாட் ட்ரோனை இஸ்ரேலின் வான்வெளியில் அனுப்பியது. சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரிலும் ஹிஸ்புல்லா ட்ரோன்களை அதிகமாக பயன்படுத்தியது.
எனவே, இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நடத்த பெரும்பாலும் அதிநவீன UAVகளுடன் கூடிய ட்ரோன்களையே ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி வந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் சமீப ஆண்டுகளாக, சொந்த ட்ரோன்களைத் தயாரித்து வருகிறது.
ட்ரோன் தயாரிப்புக்கான உதிரி பாகங்களை, குறிப்பாக தற்கொலை ட்ரோன்களை உருவாக்கத் தேவைப்படும் பொருட்களை ஐரோப்பா உள்ளிட்ட பலநாடுகளில் இருந்து ஹிஸ்புல்லா பெறுகிறது.
ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை விட சிறியதாகவும் மெதுவாகவும் ட்ரோன்கள் உள்ளதால், நிறுத்துவம், அவற்றை இடை மறிப்பதும் கடினம். குறிப்பாக அவை எல்லைக்கு அருகாமையில் இருந்து ஏவப்படும்போது, குறுக்கிடுவதற்கு குறுகிய எதிர்வினை நேரம் தேவைப்படுவதால் , வான்வெளி பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோமால் தடுக்க முடியாது.
நடந்து வரும் தீவிர போரில், ஹிஸ்புல்லாவின் ட்ரோன்களை சமாளிப்பதே இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்புக்குப் பெரும் சவாலாகும் என்று ராணுவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.