ஜம்மு – காஷ்மீரின் நாக்ரோட்டா சட்டப்பேரவை தொகுதியின் பாஜக எம்எல்ஏ தேவேந்தர் சிங் ராணா உடல்நலக்குறைவால் காலமானார்.
அண்மையில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் யூனின் பிரதேசத்துக்கான சட்டப்பேரவை தேர்தலில், நாக்ரோட்டா சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவேந்தர் சிங் ராணா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சில நாட்களில் அவர் சட்டமன்ற கட்சித் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 6 மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தேவேந்தர் சிங் ராணா, ஹரியானாவின் ஃபரிதாபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராணா உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மறைந்த ராணா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் இளைய சகோதரர் ஆவார். ஜம்மு பகுதியில் ஆதிக்க சமூகமாக திகழும் டோக்ரா இன மக்களிடையே ராணா செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்து வந்தார். அவரது மறைவுக்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.