ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் தனது கடமையை சரியாக மேற்கொள்ளாவிட்டால், அவரது பதவியை தான் ஏற்கவேண்டிய சூழல் உருவாகும் என துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கலந்துகொண்டு பேசினார். அப்போது ஆந்திராவில் அமைதியும், பாதுகாப்பும் மிக மோசமடைந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் கையாள்வதைப்போல, ஆந்திராவில் சட்டம் ஒழுங்கை கையாள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மாநில உள்துறை அமைச்சர் அனிதா தனது கடமையை சரியாக மேற்கொள்ளாவிட்டால், அவரது பதவியை தான் எடுக்கவோ, கேட்கவோ வெகுநேரம் ஆகாது என குறிப்பிட்ட பவன் கல்யாண், தான் மக்களுக்கு வித்தியாசமான முறையில் சேவையாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ஆந்திராவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இவ்வாறு சாடியுள்ளது ஆந்திர அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.