ஆஸ்திரேலியாவில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் மிகவும் அபாயகரமான வைரஸ் மாதிரிகள் காணாமல் போனதாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன வைரஸ் ? எப்படி காணாமல் போனது? உலகமெங்கும் மீண்டும் கோவிட் வருமா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
5 ஆண்டுகளுக்கு முன், சீனாவின் யூகான் மாகாணத்தில் இருந்து கொரொனா தொற்று பரவி உலகையே முடக்கிப் போட்டது. உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டது.
விரிவான மருத்துவப் ஆராய்ச்சிக்குப் பிறகு, இப்போது கோவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்குக் கிடைக்கின்றன. என்றாலும், கொரோனா வைரஸ் தடுப்புக்கான சிறந்த வழி, அதை முதலில் பெறாமல் இருப்பதுதான்.
இந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நிலவரப் படி, 188 நாடுகளில் 24,77,40,899 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 50,17,139 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் அமெரிக்கா, ஸ்பெயின், மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளே பெருமளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரொனா வைரஸ், இது வரை 38-க்கும் மேற்பட்ட புது புது வடிவங்களில் இன்றும், உலகமெங்கும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கோவிட் வகைகளில் BA.2.86, JN.1, KP.2, KP.3 மற்றும் XEC ஆகியவை மிகவும் ஆபத்தானவை ஆகும். இவை அனைத்தும் ஓமிக்ரான் வைரஸிலிருந்து உருவானவை ஆகும்.
இப்போது கோவிட் நோய்க்கான பரிசோதனைகளில் பெரியதாக மக்கள் ஆர்வம் காட்டவில்லை. எனவே உலகமெங்கும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
விதிவிலக்காக, ஆஸ்திரேலியாவில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை சுமார் 2,75,000 பேர் ஆஸ்திரேலியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பரில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ்,இங்கிலாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த புதுவகை கொரொனாவில் பாதிக்கப் பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில், குயின்ஸ்லாந்தில் மட்டும் கடந்த 30 நாட்களில் அதிகமான அளவில், இந்த நோய் பரவியுள்ளது. இந்த சூழலில் தான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தின் பொது சுகாதார வைராலஜி ஆய்வகத்தில் இருந்து வைரஸ் மாதிரிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹென்ட்ரா வைரஸ், லைசாவைரஸ் மற்றும் ஹன்டாவைரஸ் உட்பட பல தொற்று வைரஸ்களின் 323 மேற்பட்ட vials காணாமல் போயுள்ளன. கொசு மூலம் பரவும் நோய்க்கிருமிகளுக்கான நோயறிதல் , கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிகளுக்கு இந்த வைரஸ்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. கொடிய வைரஸ் மாதிரிகள் திருடப்பட்டதா அல்லது அழிக்கப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
இது குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த குயின்ஸ்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. உண்மையை தெரிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளதால் கொடிய வைரஸ் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டிமோதி நிக்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹெண்ட்ரா என்பது ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும். இது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகிறது. ஹன்டா வைரஸ் என்பது உயிர் கொல்லி வைரஸ் ஆகும். ஹன்டா வைரஸ் தாக்கப்பட்டவர்களில் 15 சதவீதம் பேர் இறந்து விடுவார்கள் என்றும் கூறப் படுகிறது. இந்த வைரஸ் COVID-19 வைரஸை விட விட 100 மடங்கு அதிக ஆபத்தானவை ஆகும்.
லிசா வைரஸ் தன் இனப்பெருக்கத்துக்காக மனிதர்களைப் பயன்படுத்தும் என்றும் ஹெண்ட்ரா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்றும் கூறப்படுகிறது.
மூன்று நோய்க்கிருமிகளாலும் விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறியிருக்கும் மருத்துவ வல்லுநர்கள், இந்த வைரஸ்களால், மக்களின் உயிருக்கே ஆபத்து என்றும் எச்சரித்துள்ளனர்.