ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் தங்களுக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை என ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கடந்த 20ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தவெக செய்தித் தொடர்பாளர் ஜெகதீசன், ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமாக பண்ணூர் கிராமத்தில் 900 ஏக்கர் நிலம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜெகதீசன் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பண்ணூர், திருப்பந்தியூர், திருமேனி குப்பம் ஆகிய கிராமங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமாக நிலங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பெயரில் நிலங்கள் இருப்பதற்கான உண்மையான தகவலை அளித்தால், அந்த நிலத்தை தாங்கள், அடையாளம் காட்டும் நபருக்கு இலவசமாக மாற்றி கொடுக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜி ஸ்கொயரின் வெற்றியானது நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களின் கடின உழைப்பால் மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும், தங்கள் நிறுவனத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.