மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், பாலுக்குழி கிராமத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டியதாக அளித்த புகாரின்பேரில் தமது வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரியும் கேரளாவைச் சேர்ந்த சிபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், விதிகளை மீறி தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதை அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டவிதிகளை மீறி மருத்துவ கழிவுகள் கொட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.
வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைவர், உள்துறை செயலாளர் ஆகியோரை தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதி, விதிகளை மீறி மருத்துவ கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்வது குறித்து உரிய வழிகாட்டுதலை அந்தந்த துறையினருக்கு செயலாளர்கள் பிறப்பிக்க வேண்டும் என கூறினார்.
மேலும், மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.