குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வீட்டில் நகை திருடுப்போனதாக பொய் புகார் அளித்த ராணுவ வீரரின் மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மணலி பகுதியை சேர்ந்த அஜித்குமார், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். பணி நிமித்தமாக அஜித்குமார் அந்தமானில் உள்ள நிலையில் அவரது மனைவி சுபலலிதா மற்றும் மகன் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட மகனுடன் சுபலலிதா ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட சுபலலிதா, வீட்டில் இருந்த 22 சவரன் நகை மற்றும் பணம் காணாமல் போனதாக கூறி காவல்நிலையத்தில் புகரளித்தார். இதையடுத்து வர்க்கீஸ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ராணுவ வீரரின் வீட்டில் 7 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதாகவும், நகையை திருடவில்லை எனவும் வாக்குமூலம் அளித்தார். இதனைத்தொடர்ந்து சுபலலிதாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பொய் புகாரளித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.