காட்டுமன்னார்கோவிலில், குறும்பட இயக்குநர் சொகுசு காரில் கடத்தப்பட்ட சம்பவத்தில், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென் ஆப்ரிக்கா நாட்டில் வசித்து வரும் பிரசாத் படேல் என்பவரிடம், குறும்படம் இயக்குவதற்காக, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.
குறும்படம் யூடியூபில் வெளியான நிலையில், வரவு – செலவு விவகாரத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் சந்திரபிரபு மற்றும் ஜெகதீசன் ஆகியோரிடம் பிரசாத் படேல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த கார்த்திகேயனை, காரில் வைத்து சந்திரபிரபு மற்றும் ஜெகதீன் உள்ளிட்டோர் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக, அவரது குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அந்த காரை சினிமா பட பாணியில் விரட்டிச் சென்று போலீசார் மடக்கினர். மேலும், சந்திர பிரபு மற்றும் ஜெகதீசன் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பிரசாத் படேல் மற்றும் தப்பியோடிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.