திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் மாணவர்களே சமையல் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சுப்பிரமணியசாமி அரசு கலைக் கல்லூரி அருகேயுள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
விடுதியில் ராஜபாண்டியன் என்பவர் காப்பாளராகவும், 2 பேர் சமையல் பணியும் செய்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே காப்பாளரும், பணியாளர்களும் விடுதிக்கு வராமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் மாணவர்கள் தாங்களாகவே சமைத்து வருகின்றனர். மேலும், சமையலுக்கு அழுகிய காய்கறிகள் வழங்கப்படுவதால் அவ்வப்போது உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் மாணவர்கள் சமைப்பது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.