அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் மீதான உத்தரவை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது சம்பந்தமான மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் அருள்முருகன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய தலைமை தேர்வு செய்தது உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளதாகவும் வாதிட்டார்.
அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பெரும்பாலான உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் பக்கம் உள்ளதால் இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என வாதிட்டனர்.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் மீதான உத்தரவை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.