அத்திக்கடவு அவினாசி திட்ட நிகழ்வில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் எழுப்பிய குரல் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் எழுப்பிய உரிமைக் குரல் குறித்தும் அதற்கு அதிமுகவினர் ஆற்றிய எதிர்வினைகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
பேரறிஞர் அண்ணா தொடங்கிய திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய செங்கோட்டையன், 1972 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் தலைமையை ஏற்று அவர் தொடங்கிய அதிமுகவில் பயணிக்கத் தொடங்கினார்.
கோபி செட்டிபாளையத்தின் எம் ஜி ஆர் மன்ற மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையன் அதிமுகவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல கடுமையாக உழைத்தவரில் ஒருவராவார். கட்சியின் வளர்ச்சிக்காக தீவிரமாக பணியாற்றிய செங்கோட்டையனுக்கு 1977 சட்டமன்றத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் எம் ஜி ஆர்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட செங்கோட்டையன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை வீழ்த்தி முதன்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அதன் தொடர்ச்சியாக 1980ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செங்கோட்டையன், அத்தொகுதியின் அடையாளமாக இன்றளவும் திகழ்ந்து வருகிறார்.
எம் ஜி ஆர் மறைவுக்கு பின்பு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் முதன்மையானவராக செங்கோட்டையன் அறியப்பட்டார். ஜெயலலிதா மாநிலத்தின் எந்த மாவட்டத்திற்கு பயணிக்க வேண்டுமென்றாலும் அதற்கான திட்டமிடலை செங்கோட்டையன் தான் மேற்கொண்டு வந்தார்.
செங்கோட்டையன் திட்டம் ஒன்று போட்டால் அதில் எள்ளளவும் பிசிறு தட்டாது என்று சொல்லும் அளவிற்கு ஜெயலலிதாவின் பயணத் திட்டத்தை வகுப்பதில் கில்லாடியாகவும் திகழ்ந்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா சிறைக்கு செல்லும் சூழல் ஏற்பட்ட நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் இதே செங்கோட்டையன் தான். அதிமுகவில் மூத்த தலைவர், சட்டமன்றத்தில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் என பல்வேறு காரணங்களை அடுக்கி செங்கோட்டையனையே அதிமுக சட்டமன்ற குழுத்தலைவராக தேர்வு செய்ய விரும்பினார் வி.கே.சசிகலா.
ஆனால் அப்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு அந்த போட்டியில் இருந்து செங்கோட்டையன் விலகவே, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
அத்திக்கடவு, அவினாசி திட்டத்தை செயல்படுத்தியதாக கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தன்னை அறிமுகப்படுத்தி, அடையாளப்படுத்தி, வளர்த்தெடுத்த தலைவர்களான எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு செங்கோட்டையன் எதிர்ப்புக் குரலை எழுப்பியுள்ளார். செங்கோட்டையன் எழுப்பியிருக்கும் உரிமைக் குரல் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினரின் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என மூன்று அணிகள் தனித்தனியாக இயங்கி வரும் நிலையில் செங்கோட்டையனும் அதிமுகவில் தனி அணியை உருவாக்குகிறாரா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
அந்த விவாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் இல்லத்தில் அவரது ஆதரவாளர்களும் திரண்டது அதிமுகவின் உயர்மட்டத் தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்திக்கடவு அவினாசி திட்ட நிகழ்வை புறக்கணித்த பின்பு அண்மையில் கோபி செட்டிபாளையத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்பத்திற்கு இணையான அளவுக்கு செங்கோட்டையனின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது அதிமுகவில் புதிய கலகத்தை உருவாக்க செங்கோட்டையன் தயாராகிவிட்டார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
அதற்கு ஏற்ற வகையிலேயே செங்கோட்டையின் பேச்சும் இடம்பெற்றிருந்தது. தன்னைப் பற்றி ஜெயலலிதா பேசியதை மேடையிலேயே போட்டுக் காட்டிய செங்கோட்டையன், எத்தனையோ வாய்ப்பு வந்த போதும் அதிமுகவை விட்டு செல்லாத என்னை சோதித்து பார்க்காதீர்கள் எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தனது பேச்சை நிறைவு செய்தார்.
அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி பூசல் தலைவிரித்தாடும் நிலையில், போர்க்கொடியை உயர்த்திப் பிடித்திருக்கும் செங்கோட்டையனை சமாளிக்கவோ, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவோ எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்வராதது அதிமுகவின் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுக மீண்டும் ஒன்றாக இணைவதோடு, வலுவான கூட்டணி அமைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என அரசியல் விமர்சகர்கள் கணித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அவருக்கு தொடர்ந்து 11வது தோல்வியை பெற்றுத்தரும் வகையிலேயே இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.