திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கிய விவகாரத்தில், திடீர் திருப்பமாக கோவில் அர்ச்சகரே மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இணையத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. அவ்வாறு பதிவு செய்திருந்த பக்தர்கள் சிலர், சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தனர். அப்போது போலி இணையதளத்தில் அவர்கள் பதிவு செய்தது தெரியவந்தது.தொடர்ந்து திருநள்ளாறு கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், போலி இணையதளம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டது, திருநள்ளாறு கோயில் அர்ச்சகர் வெங்கடேஸ்வர குருக்கள்தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிக தொகை பெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியதும் அம்பலமாகியுள்ளது.
இணையதளத்தை நடத்த பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்த ஜனனி பரத் என்பவர் உதவிய நிலையில், இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.