சிறுவாபுரி பால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்திபெற்ற பால சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சஷ்டி விரதத்தை முன்னிட்டு இன்று இக்கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
இலவச தரிசனம் முதல் சிறப்பு தரிசன வரிசை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், கோயிலுக்குள் செல்ல முடியாதோர் கோபுர வாயில் முன்பு நெய்தீபங்களை ஏற்றி முருக பெருமானை வழிபட்டனர்.
ஆனால், கோயில் முன்பு பக்தர்கள் காலணிகளை விட்டுச் செல்லும் இடத்திலேயே, அவர்கள் நேர்த்திக்கடனாக பக்தியுடன் ஏற்றும் நெய்தீபங்களை ஒதுக்கி தள்ளும் நிலை உள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதனால் கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், நெய் தீபம் ஏற்றுதல், காலணி பராமரிப்பு உள்ளிட்டவற்றை முறைப்படுத்தவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.