இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கைதான மீனவர்களை படகுகளுடன் விடுவிக்க வலியுறுத்தி, தங்கச்சி மடத்தில் வரும் 28-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.