திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தங்களுக்கு வழங்கிய இடத்தில் மண் குவாரியை செயல்படுத்தினால் குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம் எனக்கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரடி புத்தூர் கிராமத்தில் உள்ள அரசு நத்தம் நிலத்தில் சாலை பணிகளுக்காக மண் எடுக்க, குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் மற்றும் கிருஷ்ணா கால்வாய் நீரை கொண்டு வர நிலங்களை வழங்கிய கிராம மக்கள், ஊராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குவாரி அமைக்கப்பட்டுள்ள இடம், தங்களுக்கு அரசு வழங்கியதாவும், அந்த இடத்தில் குவாரி நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தி குடும்ப அட்டைகளை கைகளில் ஏந்தியபடி பேரணியாக சென்று கண்டன கோசங்களை எழுப்பினர். மேலும், மாற்று இடத்தில் மண் குவாரி செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.