உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக , வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே நடந்த பேச்சுவார்த்தை கடும் வாக்கு வாதத்தில் முடிந்துள்ளது. இதனால், உக்ரைனுக்கு எந்த மாதிரியான பாதிப்புக்கள் ஏற்படும் ? மற்ற உலக நாடுகள், என்ன சொல்கின்றன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், பிரிட்டன் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக நின்றன. ரஷ்யாவுக்குப் பொருளாதார தடை விதித்ததோடு, உக்ரைனுக்கு பெருமளவில் ஆயுத உதவிகள் மற்றும் நிதி உதவிகள் செய்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் அதிபரான ட்ரம்ப், உக்ரைன் விவகாரத்தில் முந்தைய ஜோ பைடன் அரசு எடுத்த கொள்கைகளை முற்றிலுமாக மாற்றினார். போரை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சவூதி அரேபியாவில் , ரஷ்யாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார். இந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. மேலும் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய ட்ரம்ப், ரஷ்யாவுடனான உறவைப் புதுப்பித்தார். ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளுக்கு உக்ரைன் உரிமை கோர கூடாது என்றும், அவற்றை மீட்டெடுக்க முயற்சி செய்ய கூடாது என்றும் உக்ரைனை அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
போருக்காக உக்ரைனுக்கு அமெரிக்கா செலவழித்த நிதியை உக்ரைன் திருப்ப தரவேண்டும் என்று கூறிய ட்ரம்ப், அதற்காக உக்ரைனின் கனிம வளம் மீதான உரிமையை கால வரையறை இன்றி அமெரிக்காவுக்குத் தரவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமெரிக்காவுக்கு வந்தார்.
வெள்ளை மாளிகையில் ட்ரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரவேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறிய நிலையில், பேச்சுவார்த்தை காரசாரமானது. இந்த பேச்சுவார்த்தையின் போது உடனிருந்த துணை அதிபர் ஜேடி வான்ஸ், ட்ரம்பின் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் போரை நிறுத்த முயற்சி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.
எந்த மாதிரியான ராஜா தந்திரம் என்று எதிர் கேள்வி கேட்ட ஜெலன்ஸ்கி, 2014ம் ஆண்டு ஒபாமா காலத்தில் ஆரம்பித்த போர், பிறகு ட்ரம்ப், பைடன், தற்போது மீண்டும் டிரம்ப், என தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும், உக்ரைனின் நிலைமை தான் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
மேலும், இதிலென்ன ராஜதந்திரம் இருக்கிறது என்று குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகளை ஒரு சந்தையாக தான் அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது என்று விமர்சித்தார். உடனே கோபமான ட்ரம்ப், அமெரிக்கா போரை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானம் ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும், தங்களின் இதுபோன்ற பேச்சு தான் மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் அபாயமாக உள்ளது என்றும் கடுமையாக பதிலளித்தார்.
இதன் காரணமாக திட்டமிடப் பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பும், கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டன. அதன் பிறகு தான் பங்கேற்ற தொலைக்காட்சி நேர்காணலில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா அளித்த ஆதரவுக்கு பலமுறை ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
மேலும், வெள்ளை மாளிகையில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்த ஜெலன்ஸ்கி, ட்ரம்புடன் மீண்டும் நல்லுறவை காப்பாற்ற முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் மதிப்பு மிக்க ஓவல் அலுவலகத்தில் ஜெலன்ஸ்கி அவமரியாதை செய்தார் என்றும், அவர் அமைதிக்கு தயாராக இருக்கும்போது திரும்பி வெள்ளை மாளிகைக்கு வரலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், போலந்து, ஸ்வீடன், நார்வே, மால்டோவா, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, டென்மார்க் பல ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்களும், அதிபர்களும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் ஆகியவை உக்ரைனுக்கு ஆதரவாக றிக்கையும் வெளியிட்டுள்ளன.
உக்ரைன் ஒருபோதும் தனியாக இல்லை என்றும், உக்ரைன் மக்களின் துணிச்சலை மதிப்பதாக கூறியுள்ள ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், வலிமையாக, தைரியமாக, அச்சமின்றி இருங்கள். ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்காக ஐரோப்பா, உக்ரைனுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னிருக்கும் பெரும் சவால்களை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என்பது குறித்து வெளிப்படையாகப் பேசுவதற்காக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு இடையே உடனடியாக உச்சிமாநாடு தேவை என்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி கூறியுள்ளார்.
ரஷ்யாவை ஒரு ஆக்கிரமிப்பாளர் என்று சாடியுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கண்ணியம் மற்றும் மரியாதைக்காக போராடும் உக்ரைனுக்கு ஆதரவளிக்குமாறு நேட்டோ நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
பெருகிவரும் ஆதரவின் மத்தியில், ஜெலென்ஸ்கி தனக்கு ஆதரவாக நின்ற ஐரோப்பிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஐரோப்பா நாடுகள் மீது 25 சதவீத வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ட்ரம்புக்கு எதிராகவும், ஜெலன்ஸ்கிக்கு ஆதரவாகவும் ஐரோப்பிய நாடுகள் அணிவகுத்துள்ளன.
உக்ரைனை நேட்டோவில் உறுப்பினராக்க வலியுறுத்திய ஜெலன்ஸ்கியின் ஒற்றை தவறால், உக்ரைன் ரஷ்யாவுடன் போரில் சிக்கியது. ட்ரம்புடனான வார்த்தை மோதலால்,ட்ரம்ப், உக்ரைனுக்கான நேட்டோ கதவுகளை மூடி விடலாம். கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நிலையில், செய்த நிதியுதவியை வட்டியுடன் ட்ரம்ப் செலுத்த கட்டாயப்படுத்தலாம்.
பாதுகாப்பு உத்தரவாதமும், இல்லாமல், வேறு எந்த உதவியும் இல்லாமல் உக்ரைன் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தினால், அப்போதும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன்வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
போரில் இருந்து தன் மக்களைக் காப்பாற்றவும்,நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் கிடைத்த நல்ல வாய்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தவற விட்டுள்ளார் என்று சர்வ தேச அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.