சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ஆதிபுரீஸ்வரர் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா விநாயகர் உற்சவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயில் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்திற்கு வேத மந்திரம் முழங்க புனித நீரை ஊற்றி கொடியேற்றும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனை அடுத்து கோயில் உட்பிரகாரத்தில் சுவாமி வீதி உலா வந்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 10ஆம் தேதி திருத்தேரோட்டமும், மார்ச் 12ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறவுள்ள நிலையில், கோயில் முழுவதும் அழகிய வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, 4 மாட வீதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளன.
இதனிடையே திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருக்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடிவுடை மாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை சார்பில் 5 திருக்குடைகள் வழங்கப்பட்டன. இந்த திருக்குடை ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.