வரும் 7ஆம் தேதி அரக்கோணத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுப்பான கடலோரப் பகுதி, செழுமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் வரும் 7ஆம் தேதி சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சென்னையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி சரவணன் மற்றும் டிஐஜி பொன்னி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஐஜி சரவணன், 14 பெண்கள் உள்பட 125 சிஐஎஸ்எப் வீரர்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்றும், பேரணியாக செல்லும் வீரர்கள் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.
மொத்தம் 6 ஆயிரத்து 553 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளதால் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வரும் 7ஆம் தேதி அரக்கோணத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பார் எனக்கூறிய அவர், இறுதியாக சைக்கிள் பேரணி கன்னியாகுமரியை அடையும்போது வீரர்களுக்கு வரவேற்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.