பரமக்குடி அருகே முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா விக்கிரவாண்டி வலசை கிராமத்தை சேர்ந்த உத்திரகுமார் என்பவர் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் உத்திரகுமாரை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில், உத்திரகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சென்னை வேளச்சேரியில் தொழிலதிபர் பழனிசாமியை உத்திரகுமார் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், பழனிசாமியின் தரப்பினர் பழிவாங்கும் விதமாக உத்திரகுமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக்கூறி கோஷம் எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்று கொண்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.