தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பாஜக மனுத்தாக்கல் செய்துள்ளது.
மும்மொழி பாடத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தி வரும் நிலையில், தமிழகம், கேரளா, மேற்குவங்க மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக, பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், அனைத்து தரப்பு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தவும், அனைத்து இந்திய மொழிகளையும் குழந்தைகள் இலவசமாக கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால், அரசியல் காரணங்களுக்காக தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தி திணிப்பு என்ற பொய்யான காரணத்தை கூறி தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை ஏற்க மறுப்பது பள்ளி குழந்தைகளின் அடிப்படை உரிமையான இலவச கல்வியை மறுக்கும் செயல் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.